தொழில் அதிபர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்


தொழில் அதிபர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 6 April 2022 3:27 AM IST (Updated: 6 April 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஜன்னல் கம்பியை வளைத்து தொழில் அதிபர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஜன்னல் கம்பியை வளைத்து தொழில் அதிபர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜன்னல் கம்பியை வளைத்து...
நாகர்கோவில் சீயோன் தெருவைச் சேர்ந்தவர் ஜோநாதன் டேனியல் (வயது 46). தொழில்அதிபரான இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது பெற்றோர் மேற்கு லுத்தரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். தற்போது அவர்கள் இறந்து விட்டதால் அந்த வீட்டில் யாரும் இல்லை.
இந்தநிலையில் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக வேலைக்கார பெண் ஒருவர் நேற்று வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மாடி அறையில் உள்ள ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ஜோநாதன் டேனியலுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் சோதனையும் நடந்தது.
வீட்டுக்குள் மாடி வழியாக புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளனர். ஆனால் வீட்டில் நகையோ, பணமோ மற்றும் விலை உயர்ந்த பொருட்களோ இல்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
போலீஸ் விசாரணை
இதே தெருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் டாக்டர் வீட்டில் 97 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நேரத்தில் தான் இந்த வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இதுதொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story