தூத்துக்குடியில் ரூ. 16 கோடி போதைப் பொருள் சிக்கியது
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இங்கு இருந்து அதிக அளவில் மஞ்சள், கடல் அட்டை, வெங்காய வித்து, பீடி இலை உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இலங்கையில் இருந்து ஆட்களும் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டனர்.
இதனால் உளவுப்பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ரூ.16 கோடி போதைப்பொருள்
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரை பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, முள்ளக்காடு கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு படகை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த படகில் 5 பாக்கெட்டுகளில் கற்கண்டு போன்று இருந்த பொருட்கள் சிக்கியது. அதிகாரிகள் பரிசோதித்தபோது, பாக்கெட்டுகளில் இருந்த பொருள் ‘கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்’ என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இதனை ‘ஐஸ்’ என்றும், ‘சிந்தடிக்’ போதைப்பொருள் என்றும் அழைக்கின்றனர். மொத்தம் சுமார் 5 கிலோ 200 கிராம் போதைப் பொருள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.16 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
பறிமுதல்
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் மற்றும் படகை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், போதைப்பொருளை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தலில் ஈடுபட முயன்றவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story