வேடசந்தூர் டிரைவர் உள்பட 3 பேர் மேற்கு ஆப்பிரிக்காவில் தவிப்பு
மேற்கு ஆப்பிரிக்காவில் வேலையிழந்து, பசி பட்டினியோடு தவிக்கும் வேடசந்தூர் டிரைவர் உள்பட 3 பேரை மீட்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். செந்தில்குமார் ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த பழனிமுத்து (47), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ஜெய்சங்கர் (41) ஆகியோரும் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்க்கினா பாசோ நாட்டிற்கு, ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி டிரைவர் பணிக்காக சென்றனர். அங்கு பணியின்போது ஆழ்துளை கிணறு அமைக்கும் எந்திரம் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தினர், செந்தில்குமார் உள்பட 3 பேரையும், பணியாற்ற தெரியவில்லை என்று கூறி அந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றினர்.
இதனால் 3 பேரும் அந்நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் கடந்த 10 நாட்களாக தவித்து வருகின்றனர். அங்குள்ள தெருவோர மரத்தடியில் பசி, பட்டினியோடு தங்கியுள்ளனர். சொந்த நாட்டிற்கு செல்லவேண்டும் என்று தனியார் நிறுவனத்திடம் கேட்டும், பாஸ்போர்ட்டுகளை தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய தூதரகத்தில் செந்தில்குமார் உள்பட 3 பேர் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே செந்தில்குமார், பசி பட்டினியோடு தவித்து வருவதாக கண்ணீரோடு பேசி வேடசந்தூர் பகுதியில் உள்ள தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், மேற்கு ஆப்பிரிக்காவில் தவிக்கும் செந்தில்குமாரை மீட்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் மற்ற 2 பேரின் குடும்பத்தினரும், தகவல் அறிந்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story