கல்லூரி மாணவருக்கு கத்தி வெட்டு
செய்யாறில் கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்யாறு
செய்யாறில் கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் கிழக்கு மாட வீதி தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன். அவரது மகன் பாபு (வயது 20), செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலால் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்திய நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கல்லூரி விடுமுறை காலங்களில் பாபு சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்த பைசல் என்பவரிடம் நட்பு ஏற்பட்டு, அவருடன் சேர்ந்து போர்வை வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கல்லூரி திறக்கப்பட்டதால் பாபு சென்னையில் இருந்து செய்யாறு வந்து கல்லூரி படிப்பை தொடர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து பைசல், பாபுவை போனில் தொடர்பு கொண்டு போர்வை வியாபாரம் செய்ய வலியுறுத்தியும், போர்வை வழங்க செய்யாறு வந்துள்ளதாகவும் கூறி கோனேரியான் குளக்கரை அருகே வரும்படி அழைத்துள்ளார்.
கத்தி வெட்டு
அங்கு வந்த பாபுவிடம், பைசல் பேசிக்கொண்டிருந்த போது ஏன் என்னுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய மறுக்கிறார் என கேட்டு தகராறு செய்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பைசல் அங்கு ஏற்கனவே இருந்த தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பாபுவை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது பைசல் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் படுகாயம் அடைந்த பாபுவை சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பைசல் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story