கர்ப்பமாக இருந்த சிறுத்தையை சுட்டுக்கொன்ற வேட்டை கும்பல்; வயிற்றில் இருந்த 2 குட்டிகளும் உயிரிழந்த சோகம்


கர்ப்பமாக இருந்த சிறுத்தையை சுட்டுக்கொன்ற வேட்டை கும்பல்; வயிற்றில் இருந்த 2 குட்டிகளும் உயிரிழந்த சோகம்
x
தினத்தந்தி 6 April 2022 8:55 PM IST (Updated: 6 April 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

எல்லாப்புரா அருகே கர்ப்பமாக இருந்த சிறுத்தையை வேட்டை கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் வயிற்றுக்குள் இருந்த 2 குட்டிகளும் உயிரிழந்தன.

பெங்களூரு:

செத்து கிடந்த சிறுத்தை

  உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்புரா அருகே பிசகோடு ரோட்டில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை சிறுத்தை ஒன்று துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் செத்து பிணமாக கிடந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் மண்டல துணை வனத்துறை அதிகாரி சுனில் ஜங்கம்ம ஷெட்டி மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சிறுத்தையின் உடல் எல்லாப்புரா வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

2 குட்டிகளும் உயிரிழந்த சோகம்

  இதில் வேட்டை கும்பல் சிறுத்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும், செத்துப்போன சிறுத்தை கர்ப்பம் தரித்து இருந்ததும், வேட்டை கும்பல் துப்பாக்கியால் சுட்டத்தில் சிறுத்தையின் வயிற்றுக்குள் இருந்த 2 குட்டிகளும் செத்ததும் தெரியவந்தது.

  இதுகுறித்து எல்லாப்புரா வனச்சரகர் பாலசுப்பிரமணியா கூறுகையில், பிரேதப் பரிசோதனையில் சிறுத்தையை மர்மநபர்கள் அதிகாலை 3 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். செத்துப்போன சிறுத்தை கர்ப்பமாக இருந்தது. மர்மநபர்கள் செயலால் சிறுத்தையும், அதன் வயிற்றில் இருந்த 2 குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதற்கு காரணமான மர்மநபர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

வலைவீச்சு

  இதுதொடர்பாக எல்லாப்புரா வனத்துறையினர் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கர்ப்பமாக இருந்த சிறுத்தையை கொன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கர்ப்பமாக இருந்த சிறுத்தையை வேட்டை கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story