பெரிய ஐஸ் கட்டிகளை நீல நிறத்தில் தயாரிக்க வேண்டும்


பெரிய ஐஸ் கட்டிகளை நீல நிறத்தில் தயாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 April 2022 9:33 PM IST (Updated: 6 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

பெரிய ஐஸ் கட்டிகளை நீல நிறத்தில் தயாரிக்க வேண்டும்

திருப்பூர்,
ஐஸ் கட்டி நிறுவனங்கள் பெரிய ஐஸ் கட்டிகளை நீல நிறத்தில் தயாரிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஐஸ் கட்டி தயாரிப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு குழு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோடை காலமாக இருப்பதாலும், அதிக வெப்பநிலை இருப்பதாலும் பொதுமக்களுக்கு குளிர்ந்த பானங்களை அருந்தும் எண்ணம் அதிகமாக இருக்கும். அதற்கு தேவையான மூலப்பொருட்களான ஐஸ் கட்டி, பழங்கள், பழச்சாறுகள், மரபு சார்ந்த கஞ்சி, கூழ்கள் மற்றும் மோர் சந்தையில் விற்பனை செய்வது அதிகமாக உள்ளது. அசைவ உணவுகள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-ன் படி ஐஸ்கட்டிகள் நேரடியாக உணவுக்கு பயன்படுத்துவதற்கு சரியான பாதுகாப்பான தண்ணீரை பயன்படுத்தி தயாரித்து, உண்ணுவதற்கு பயன்படுத்த வேண்டும். அசைவ மற்றும் சில உணவு பொருட்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் பெரிய அளவில் தயாரித்து விற்கப்படுகிறது. அந்த ஐஸ் கட்டிகள் நீல நிறத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து ஐஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நீர்ச்சத்து பொருட்கள்
ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் சில தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய ஐஸ் கட்டிகள் நீல நிறத்தில் தயாரிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இரண்டு நிறுவனங்களுக்கு அறிவுரையும், எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது. ஐஸ் விற்பனை செய்யப்படும்போது அதில் அனுமதி பெறாத செயற்கை வண்ண நிறமிகள் சேர்க்கக்கூடாது என்று ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிறுகுழந்தைகளை கவரும் வகையில் குச்சி ஐஸ் சரியான வெப்பநிலையில் பராமரிக்கவும், பாதுகாப்பாகவும் விற்பனை செய்ய எச்சரிக்கப்பட்டது. அனைத்து ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம், பதிவுச்சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும்.
கோடைகாலத்தில் பொதுமக்கள் எளிதில் செரிக்கக்கூடிய காரமில்லாத, அதிக மசாலா பொருட்கள் கலக்காத உணவை உட்கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவு பண்டங்களை தவிர்க்கவும் வேண்டும். கம்பு, ராகி கூழ், மோர், பழங்கள், காய்கறிகள் மற்றும் பழச்சாறு என அதிக நீர்ச்சத்து பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

Next Story