அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கும் சிறுவர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கும் சிறுவர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
போடிப்பட்டி, -
அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கும் சிறுவர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
இளங்கன்று பயமறியாது
இன்றைய நிலையில் சாலைப் போக்குவரத்து என்பது சவாலான ஒன்றாக மாறி விட்டது.குண்டும் குழியுமான சாலைகள், அதிக வேகம், பராமரிப்பில்லாத வாகனங்கள், சாலை விதிகளை மீறுதல் என்று விபத்துக்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.ஆனாலும் சமீப காலங்களாக சிறுவர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதும் பல விபத்துக்களுக்குக் காரணமாகி விடுகிறது.இளம் வயதிலேயே வாகனங்களை நன்கு இயக்கக் கற்றுக் கொண்டார்கள் என் பிள்ளைகள் என்ற பெற்றோரின் பெருமிதம், சிறுவர்களிடம் வாகனங்களைக் கொடுக்கத் தூண்டுகிறது. ஆனால் இளங்கன்று பயமறியாது என்பதனால், சிறுவர்கள் சாலை விதிகளைத் தெரிந்து கொள்ளாமலும், நிதானமில்லாமலும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குகிறார்கள். அதிலும் பல இடங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவிகளுக்கும் பெற்றோர் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல அனுமதி வழங்குகிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற பதட்டம், சக மாணவர்களிடையே போட்டி என மாணவர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குகிறார்கள்.அதிலும் ஒருசில மாணவர்களுக்கு அதிக குதிரைத் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை பெற்றோர் வழங்கியுள்ளனர்.இதனால் உற்சாகமடைந்த சிறுவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்குகிறார்கள்.
விழிப்புணர்வு
ஒருசில பெற்றோர் சிறுவர்களிடம் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை வழங்குகிறார்கள்.இது மிக மோசமான விபத்துகளுக்கு வழி வகுத்து விடும் என்பதை பெற்றோர் உணருவதில்லை.சிறுவர்கள் வாகனங்களை இயக்கி போலீசாரிடம் சிக்கும் போது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனாலும் அச்சமில்லாமல் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களில் நகர் வலம் வருவது வியப்புக்குரியதாக உள்ளது.சிறுவர்கள் இயக்கும் வாகனங்களால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக போலீசார் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பள்ளி நேரம், சிறப்பு வகுப்புகளுக்கான நேரங்களில் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.வாகனங்களை இயக்கும் சிறுவர்களின் பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.பள்ளிகளுக்கு வாகனங்களில் வரும் மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story