கூடுதலாக 17 ஆயிரம் எக்டேர் பயிர்க்காப்பீடு செய்யப்படுவதால் இழப்பீடு பெறுவதில் சிக்கல்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்


கூடுதலாக 17 ஆயிரம் எக்டேர் பயிர்க்காப்பீடு செய்யப்படுவதால் இழப்பீடு பெறுவதில் சிக்கல்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்
x
தினத்தந்தி 7 April 2022 12:15 AM IST (Updated: 6 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி பரப்பளவை விட கூடுதலாக 17 ஆயிரம் எக்டேருக்கு பயிர்க்காப்பீடு செய்யப்படுவதால் இழப்பீடு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி பரப்பளவை விட கூடுதலாக 17 ஆயிரம் எக்டேருக்கு பயிர்க்காப்பீடு செய்யப்படுவதால் இழப்பீடு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார். 

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
தம்புசாமி:- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை ஒத்தி வைக்காமல், அந்தந்த மாதத்தில் தவறாமல் நடத்த வேண்டும்.
மருதப்பன்:- முன்னாவல்கோட்டை முதல் காளாச்சேரி வரை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். 
பாலகுமாரன்:- பேரளம் நெட்டை வாய்க்காலை தூர்வார வேண்டும். 

யூரியா வழங்க வேண்டும்

சத்தியநாராயணன்:- பருத்தி சாகுபடிக்கு ஏற்ற வகையில் யூரியா வழங்க வேண்டும். 
சேதுராமன்:- விவசாய பணிகளுக்கான இணையதள முறையில் பெரும்பாலான விவசாயிகள் பயன் அடைவதில் சிரமங்கள் உள்ளன. எனவே பழைய நடைமுறையில் விவசாய திட்டங்களை செயல்படுத்தினால் அனைத்து விவசாயிகளும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர். 
தொடர்ந்து பேசிய கலெக்டர் கூறியதாவது:- 

கூடுதலாக பயிர்க்காப்பீடு

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 1 லட்சத்து 64 ஆயிரம் எக்டேர் பரப்பளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பை விட கூடுதலாக 17 ஆயிரம் எக்டேர் பயிர்க்காப்பீடு செய்யப்படுவதால் இழப்பீடு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. யாரோ சிலர் செய்கின்ற தவறுகளால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே விவசாயிகள் ஒத்துழைப்பு அளித்தால் தான் எந்த பயனையும் முழுமையாக பெற்றுத்தர முடியும்.
இவ்வாறு  அவர் கூறினார்.

Next Story