கர்நாடகத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் பால் விலை உயருகிறது?
கர்நாடகத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் பால் விலை உயருகிறது?
பெங்களூரு: கர்நாடகத்தில் தினமும் சுமார் 70 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. மாநிலத்தில் 14 பால் கூட்டமைப்புகள் உள்ளன. இந்த கூட்டமைப்புகள் கர்நாடக பால் கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவராக பாலச்சந்திர ஜார்கிகோளி எம்.எல்.ஏ. உள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பால் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்துமாறு பால் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதைத்தொடர்ந்து தற்போது பால் விலையை உயர்த்த கர்நாடக பால் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வருகிற 10-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். பால் விலை உயர்வுக்கு முதல்-மந்திரி ஒப்புதல் வழங்குமாறு அவர்கள் கேட்க இருக்கிறார்கள். முதல்-மந்திரி அனுமதி வழங்கினால், அடுத்த சில நாட்களில் பால் விலை உயரும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது பால் கட்டணமும் உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story