வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு பயிற்சி தொடக்கம்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி தொடங்கி உள்ளது.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி தொடங்கி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-4 தேர்வு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 7,301 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். குரூப்-4 எழுத்து தேர்வு வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதி நடைபெறும். இந்த தேர்விற்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச பயிற்சி
தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.
மேலும் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் ஆன்லைனிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. http://tamilnaducareerservices.tn.gov.in. என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story