சரக்கு வாகனத்தில் கடத்திய 4¼ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 4¼ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், ஏட்டுகள் பாண்டியன், மணிமாறன், போலீஸ்காரர் குபேரன் ஆகியோர் அண்ட்ராயநல்லூர் அண்ணாநகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 50 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகளில் 4,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ஞானசேகரன் மகன் நிர்மல்ராஜ் (வயது 32), திருக்கோவிலூர் அருகே கனகனந்தல் பகுதியை சேர்ந்த மணியன் மகன் சதீஷ் (28) என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில் இவர்கள் இருவரும் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனுடன் கம்பு, சோளம், கோதுமை, குருணை உள்ளிட்டவற்றை கலந்து மாவாக அரைத்து கோழி மற்றும் மாட்டு தீவனத்துக்கு பயன்படுத்துவதற்காக விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்ல கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நிர்மல்ராஜ், சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4¼ டன் ரேஷன் அரிசியையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story