மத்தன்கொட்டாய் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மத்தன்கொட்டாய் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே மத்தன்கொட்டாய் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு விநாயகர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கங்கணம் கட்டுதல், கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகளும், தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. பின்னர் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன், விநாயகர், நவகிரகங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு கோபுர கலசம் நிறுவப்பட்டது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story