குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி வார்டு. கலெக்டர் உத்தரவு
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி வார்டு அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குடியாத்தம்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி வார்டு அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பண்ணைக்குட்டை பணிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்தல், 100 நாள் வேலை திட்டத்தை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். குடியாத்தம் -சித்தூர் சாலை, வேலூர்- பள்ளிகொண்டா சாலை, பேரணாம்பட்டு சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்தும் அறிவுறுத்தினார்.
தனி வார்டு
மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளில் கர்ப்பிணிகள் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு தனியாக வார்டுகள் அமைத்து தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்காக தனியாக 20 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்க வேண்டுமென கலெக்டர்உத்தரவிட்டார்.
விவசாயிகளுக்கு உரக்கடையில் தேவையான அளவு உரங்கள் கிடைக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும்போது வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து இருப்பு குறித்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் உரக்கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story