தாயமங்கலத்தில் மின்னொளியில் நடந்தது:முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று இரவு மின்னொளியில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
இளையான்குடி,
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று இரவு மின்னொளியில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி திருவிழா
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அற நிலையத்திற்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தொடர்ந்து பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்கு எடுத்தும், அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மின்னொளி தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு மின்னொளியில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு மின் அலங்காரத்தில் தேர் அலங்கரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேருக்கு முன்பு சிறிய சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். இரவு 7.45 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக வந்து 8.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தாயமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மலைராஜ், துணைத்தலைவர் ராமன் மற்றும் மன்ற உறுப்பினர்கள், கோவில் ஒப்பந்ததாரர் ஏந்தல் ஜெயராமன், தாயமங்கலம் முத்துராமன் என்ற அருங்குளம், ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் ஆகியோர் பக்தர்களை வரவேற்றனர். இந்த விழாவில் தாயமங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் அய்யாச்சாமி, பிராந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியின் திருப்பத்தூர் சரக மேற்பார்வையாளர் போஸ், கன்னுச்சாமி தேவர் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் குமரேசன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் நகரகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் கனகராஜா, இளையான்குடி ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா கனகராஜா, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளரும், காரைக்குளம் ஊராட்சிமன்ற தலைவருமான ரவிச்சந்திரன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜான் ராஜைய்யா, இளையான்குடி உஷா டிரேடர்ஸ் உரிமையாளர் பாலகுமார், ஸ்ரீ முத்துமாரியம்மன் எர்த் மூவர்ஸ் உரிமையாளர் மாதவநகர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேர்த்திக்கடன்
இளையான்குடி தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப. மதியரசன் தலைமையில் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன், மானாமதுரை தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி சுப.அன்பரசன், ஒப்பந்ததாரர் ஏந்தல் ஜெயராமன், ஒன்றிய வர்த்தக அணி சுரேஷ், தாயமங்கலம் கிளை கழக செயலாளர் சத்தியேந்திரன், ஒன்றிய தகவல் நுட்ப அணி கண்ணன், தாயமங்கலம் மதி, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று(வியாழக்கிழமை) 9-ம் நாள் திருநாளில் காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை(வெள்ளிக்கிழமை) 10-ம் நாள் விழா அன்று காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவிலுக்கு மதுரை, சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில், பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தாயமங்கலம் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இளையான்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையில் போலீசார் 700-பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story