மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நச்சலூர்,
குளித்தலை தாலுகா, நல்லூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், பாலமுருகன், ருத்திர காளியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து முதல் கால பூஜையாக பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. 2-ம் கால பூஜையாக யாத்ராதானம், மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10.15 மணியளவில் சிவாச்சாரியர்கள் கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அப்போது வானில் கருடன் வட்டமிட்டு சுற்றியது. இதை பார்த்த பக்தர்கள் ‘ஓம் சக்தி பராசக்தி’ என பக்தி பரவசத்துடன் கூறினர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் விநாயகர் மற்றும் பாலமுருகன், ருத்திர காளியம்மன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story