வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1.1.2017 முதல் 31.3.2017 வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பட்டப்படிப்பு, மேல்நிலை கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்பு ஆண்டிற்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
www.tnvelaivaaippu.gov.in அல்லது https//tnvelaivaaippu.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்று சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலை நாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்கவேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story