கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 360 பேர் கைது


கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 360 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 12:49 AM IST (Updated: 7 April 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய மண்டலத்தில் 9 நாட்களில் கஞ்சா, புகையிலை பொருட்களை விற்ற 360 பேரை ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தில் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி, ஏப்.7-
திருச்சி மத்திய மண்டலத்தில் 9 நாட்களில் கஞ்சா, புகையிலை பொருட்களை விற்ற 360 பேரை ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தில் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா வேட்டை
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின் படி, கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க அனைத்து மாவட்ட, மாநகர போலீசாருக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்களில் திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்றதாக 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள், 143 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
360 பேர் கைது
இதுபோல் புகையிலை பொருட்கள் விற்றதாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,093 கிலோ புகையிலை பொருட்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 நாட்களில் மட்டும் 360 பேர் இந்த வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளில் மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களை கொண்டு பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையால் மத்திய மண்டலத்தில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story