பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
பெரம்பலூர்:
தூக்கில் பிணமாக தொங்கினார்
பெரம்பலூர் அருகே எசனை ரெட்டைமலை சந்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய 2-வது மனைவி கவிதா(வயது 22). இவர்களுக்கு குழந்தை இல்லை. மது குடிக்கும் பழக்கமுடைய மணிகண்டனையும், அவரது தாய் ராமாயியின் நடவடிக்கையும் கவிதாவிற்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மணிகண்டன்-கவிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கவிதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகனும் விசாரணை நடத்தி வருகிறார்.
உடலை வாங்க மறுப்பு
இந்த நிலையில் கவிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, நேற்று அவரது உடலை வாங்க மறுத்து, மருத்துவமனையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த அவரது தாய் பட்டு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு மணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், மணிகண்டன், அவரது தாய் ராமாயி மற்றும் ராமாயிக்கு நெருக்கமானவர் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கவிதாவை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கிவிட்டிருக்கலாம். எனவே அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக நாங்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதனை போலீசார் வாங்கவில்லை. தற்போது உடலை வாங்கி செல்லுங்கள் 1 மாதம் கழித்து பார்த்து கொள்ளலாம் என்று அங்குள்ள போலீசார் தெரிவித்தனர், என்று கூறியிருந்தார். மேலும் அவர்கள் கூறுகையில், கவிதாவின் கணவர், மாமியார் உள்பட 3 பேரை கைது செய்யும் வரை, கவிதா உடலை வாங்க மாட்டோம், என்றனர்.
Related Tags :
Next Story