ஏரிப்பகுதியில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


ஏரிப்பகுதியில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 2:01 AM IST (Updated: 7 April 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஏரிப்பகுதியில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துச்சேர்வாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் பாண்டியன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு உட்பட்ட இடத்தில் 50 குடும்பத்தினர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கும், ஏரிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதாகவும், எனவே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களை அப்புறப்படுத்த அச்சுறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊர் நாட்டார் ஜெயபால் தலைமை தாங்கினார். ஊர் முக்கியஸ்தர்கள் தங்கசாமி, பாலையா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பதமாவதி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் கந்தப்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலம் தாசில்தார் அலுவலகம் சென்றனர். அங்கு அந்த அலுவலகத்தின் வாயில் முன்பாக நின்று குடியிருப்பு பகுதிகளை அகற்றக்கூடாது, குடியிருப்பவர்களுக்கே குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் மீனாவிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகவும், இது சம்பந்தமாக 7-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story