மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை உடனே திறக்கக் கோரி தஞ்சையில் தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்;
மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை உடனே திறக்கக் கோரி தஞ்சையில் தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாட்டு வண்டி மணல் தொழிலாளர்கள்
தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறக்கக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. தஞ்சை பொதுப்பணித்துறையை சார்ந்த நீர் வள ஆதாரத்துறையின் சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் சட்டப்பேரவையில் நீர் வளத்துறை மானியக் கோரிக்கையின்போது மாட்டு வண்டிக்கான மணல் குவாரியைத் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். காலம்காலமாக ஆற்றில் இறங்கி மணல் அள்ளும் நடைமுறையை மாற்ற வேண்டாம். மாட்டு வண்டியில் மணல் அள்ள பர்மிட் ரூ.224 விட கூடுதல் தொகையை வசூலிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
குவாரி திறக்க வேண்டும்
பின்னர் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் கூறுகையில், “மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை தமிழக அரசு அறிவித்த படி திறப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே மாட்டு வண்டிக்கு என தனியாக மணல் குவாரி திறக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் இன்னும் மணல் குவாரி திறக்கப்படவில்லை.
இந்தக் கால நீட்டிப்பு செய்வதற்கான மர்மம், காரணம் என்ன? இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைத் தமிழக அரசுத்தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலர் அன்பு, நிர்வாகி பேர்நீதி ஆழ்வார் உள்பட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story