கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகளில் கன்னட வழிக்கல்வி கட்டாயம் இல்லை; கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு


கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகளில் கன்னட வழிக்கல்வி கட்டாயம் இல்லை; கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2022 2:40 AM IST (Updated: 7 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகளில் கன்னட வழிக்கல்வி கட்டாயம் இல்லை என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

தேசிய கல்வி கொள்கை

  இந்தியா முழுவதும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி கர்நாடக மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது. அப்போது முதல் நிலைக்கல்லூரிகளில் கன்னட மொழிகளிலேயே மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடக ஐகோர்ட்டில் மாநில அரசின் உத்தரவுக்கு தடை செய்யவேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

கட்டாயம் இல்லை

  இந்த மனு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாநில அரசு தங்கள் நிலையை தெளிவுபடுத்த கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கோரியது. ஆனால் மனுதாரர் தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இரு தரப்பின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கையில், மாநில மொழிகள் கட்டாயம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் மாநில அரசுதான் கட்டாயமாக்கி உள்ளது.

  இந்த உத்தரவை பரிசீலனை செய்யும்படி பலமுறை மாநில அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்களின் நலன் மற்றும் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் அடிப்படையில் கர்நாடக அரசின் விதித்துள்ள கன்னட வழிக்கல்வி கட்டாயம் என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டனர். ஐகோர்ட்டின் இந்த உத்தரவை மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.

Next Story