நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது-மதுரையில் கி.வீரமணி பேச்சு


நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது-மதுரையில் கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 7 April 2022 2:55 AM IST (Updated: 7 April 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராட வேண்டும், அது சமூக நீதிக்கு எதிரானது என மதுரையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

மதுரை, 

நீட் தேர்வுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராட வேண்டும், அது சமூக நீதிக்கு எதிரானது என மதுரையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

வரவேற்பு பொதுக்கூட்டம்

நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்வி திட்ட எதிர்ப்பு மற்றும் மாநில உரிமைகள் மீட்பு குறித்து குமரி முதல் சென்னை வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை வந்த அவருக்கு செல்லூர் பகுதியில் வரவேற்பு பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் இருக்கின்றனர். கூட்டணி கட்சி மட்டுமின்றி யாராக இருந்தாலும் மிகுந்த கவனத்துடன் நீட் தேர்வை கையாள வேண்டும். நீட் தேர்வானது, பற்றி எரியும் தீ போன்றது. நான் அதனை அணைக்கும் தீயைணப்பு வீரராக சென்று கொண்டிருக்கிறேன். தீயை விட ஆபத்தானது நீட் தேர்வு, இன்று வேகமாக பரவி வருகிறது. 

பா.ஜ.க. பதவி

பா.ஜ.க. கூடாராம் காலியாகி வருகிறது. பதவிகள் காலியாக உள்ளது. இதனால், வெளியில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள். அந்த கட்சிக்கு சென்ற உடன் பதவி கிடைக்கிறது. நாங்கள் தேர்தலுக்காக இணைந்த கூட்டணி அல்ல. போராட்டத்தில் இணைந்த கொள்கைக்கான லட்சிய கூட்டணி. நீட் தேர்வால் மற்ற மாநிலங்களில் கலவரம் நடக்கிறது. ஆனால், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவர்னரிடம் நாகரிகமாக, கடமை, கட்டுப்பாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கோரிக்கை முன்வைத்து வருகிறார். 
தேசிய கல்வி திட்டத்தின் மூலம் மீண்டும் குலக்கல்வியை புகுத்த மத்திய அரசு நினைக்கிறது. சமூக நீதிக்கு எதிரானது தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வை எதிர்க்க வேண்டும். தமிழகம் பகுத்தறிவு சிந்தனை கொண்டது. 
மத்திய அரசிடம், சலுகைகளை கேட்கவில்லை. மாநில உரிமையை தான் கேட்கிறோம். ஆனால், அரசியல் சட்டத்தை கவர்னர் மீறி வருகிறார். தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என நினைக்கிறார். டெல்லியின் ஒற்றர்போல் செயல்படுகிறார். இவ்வாறு கூறுவதால், என் மீது வழக்கு தொடர்ந்தாலும் பிரச்சினையில்லை. தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத காரணத்தால் பா.ஜ.க. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறது.. போட்டி அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. எனவே ஓரணியில் திரண்டு மக்கள் அனைவரும் போராட வேண்டும். நாங்கள் எங்களுக்காக மட்டுமில்லாமல், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகளின் குழந்தைகளுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
திணிப்பு
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் அனைவரும் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை கேட்கிறோம். வட மாநிலம், தென் மாநிலம், இந்தி, தமிழ், மத்திய அரசு, மாநில அரசு என்று இதனை பிரித்து பார்க்க முடியாது. மாநில மக்கள் நீட் தேர்வை விரும்பாத போது அதனை திணிக்கக்கூடாது என ராகுல்காந்தி கூறியிருக்கிறார். அதுபோல், தமிழகத்தில் நீட் தேர்வை திணிக்க கூடாது. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Next Story