ஐகோர்ட்டு உத்தரவை மீறி ஒலி மாசு ஏற்படுத்தினால் வழிபாட்டு தலங்கள் மீது சட்ட நடவடிக்கை; கர்நாடக டி.ஜி.பி. அதிரடி உத்தரவு


ஐகோர்ட்டு உத்தரவை மீறி ஒலி மாசு ஏற்படுத்தினால் வழிபாட்டு தலங்கள் மீது சட்ட நடவடிக்கை; கர்நாடக டி.ஜி.பி. அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2022 3:11 AM IST (Updated: 7 April 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவை மீறி ஒலி மாசு ஏற்படுத்தும் வழிபாட்டு தலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு, கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு:

இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு

  பெங்களூருவில் உள்ள மசூதிகள், இந்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள் பிற பகுதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒலி பெருக்கிகளால் அதிக சத்தம் வருவதன் காரணமாக அருகில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதுடன், ஒலி மாசு ஏற்படுகிறது. இதையடுத்து, மசூதிகள், கோவில்கள், பிற பகுதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்பாடு குறித்து கர்நாடக ஐகோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

  அதாவது எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒலியை பயன்படுத்த வேண்டும் என்றும், ஒலியை அளவிடும் டெசிபல் மீட்டரை பொருத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறி இருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் ஒலி பெருக்கிகளால் அதிக சத்தம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை கூறின. ஹிஜாப், ஹலால் இறைச்சியை தொடர்ந்து ஒலி பெருக்கி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது.

பெங்களூருவில் 301 நோட்டீசுகள்

  குறிப்பாக பெங்களூருவில் ஒலி பெருக்கி விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாத மசூதிகள், கோவில்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை மீறி ஒலி பெருக்கியால் ஒலி மாசு ஏற்படுத்திய மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு 301 நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

  அதன்படி, ஐகோர்ட்டு உத்தரவை மீறிய 125 மசூதிகள், 83 கோவில்கள், 22 கிறிஸ்தவ தேவாலயங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு 301 நோட்டீசுகளை போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். இதுதவிர ஒலி மாசு ஏற்படுத்தியதாகவும், ஐகோர்ட்டு உத்தரவை மீறியதாகவும் பெங்களூருவில் மட்டும் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் ஒலி பெருக்கி விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு

  கர்நாடகத்தில் வழிபாட்டு தலங்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகளில் ஒலி மாசு ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை தடுக்கவும் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கர்நாடக ஐகோாட்டு உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு, எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒலி பயன்பாடு இருக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதோ, அதனை கண்காணிக்க வேண்டும்.

  மசூதிகள், பிற வழிபாட்டு தலங்கள், பப்புகள், இரவு நேர கேளிக்கை விடுதிகளில் ஒலி பெருக்கி பயன்பாடு, அதிக சத்தம் எழுப்பி ஒலி மாசு ஏற்படுகிறதா? என்பதை போலீஸ் கமிஷனர்கள்,
ஐ.ஜி.க்கள், சூப்பிரண்டுகள் கண்காணிப்பதுடன், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி ஒலி பெருக்கியை பயன்படுத்தினால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோர்ட்டு உத்தரவை மதித்து...

  மசூதிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் ஒலி பெருக்கியால் அதிகாலையில் மாணவ, மாணவிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகள், வீடுகளில் வசிக்கும் முதியவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் அறிவுறுத்தி உள்ளார்.

  இதுகுறித்து மசூத் இம்ரான் எனபவர் கூறுகையில், ‘மசூதிகளில் ஒலி மாசு ஏற்படுவதாக இதுவரை 200 முதல் 250-க்கும் மேற்பட்ட மசூதிகளுக்கு நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசூதிகளில் ஒலி பெருக்கிகள் அதிக சத்தம் எழுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோர்ட்டு உத்தரவை மதித்து மசூதிகளில் ஒலி மாசுபடுவது தடுக்கப்படும்’, என்றார்.

Next Story