வேடசந்தூர் அருகே நின்ற பஸ் மீது லாரி மோதல் 3 பயணிகள் காயம்
வேடசந்தூர் அருகே நின்ற பஸ் மீது லாரி மோதியதில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு இன்று மதியம் ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. பஸ்சை எமர்சன் என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் வேடசந்தூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் லட்சுமணம்பட்டியில் பஸ் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.
அப்போது தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து மதுரைக்கு பால் ஏற்றிச்சென்ற லாரி, நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கி சேதமடைந்தது.
இந்த விபத்தில் பஸ்சின் பின்னால் உட்கார்ந்து இருந்த மாரம்பாடியை சேர்ந்த லில்லி (24) உள்பட 3 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
விபத்து நடந்தபோது அந்த வழியாக வேறு எந்த வாகனமும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் விபத்து காரணமாக கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் லாரி டிரைவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குமார் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story