15 ஆண்டுகளில் மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும் அபாயம்: டாக்டர் சவுமியா அன்புமணி


15 ஆண்டுகளில் மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும் அபாயம்: டாக்டர் சவுமியா அன்புமணி
x
தினத்தந்தி 7 April 2022 5:42 PM IST (Updated: 7 April 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

15 ஆண்டுகளில் மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும் அபாயம் இருப்பதாக பசுமை தாயகத்தின் தலைவர் டாக்டர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும்

சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள ராணி மேரி கல்லூரி, பசுமைத் தாயகம் இணைந்து ‘காலநிலை அவசரநிலை மற்றும் செயல் திட்டம்' என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

இந்த கருத்தரங்கில் கல்லூரியில் சமூகவியல் துறை தலைவர் எஸ்.கலாவதி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பி.உமா மகேஸ்வரி தலைமை உரையாற்றினார். இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் கார்பன் டையாக்சைடு வெளியேறுகிறது. இதனால் காற்று மிக கடுமையாக மாசடைகிறது. புவி வெப்பம் அடைகிறது.

கடல் மட்டம் உயர்வதன் காரணத்தினால் உலகம் தற்போது எட்டியுள்ள புவி வெப்பத்தைவிட மேலும் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. கடல்மட்டம் உயர்வால் அடுத்த 30 ஆண்டிற்குள் மாலத்தீவு என்ற தீவு முற்றிலும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதேபோல், 15 ஆண்டுகளில் நாம் தற்போது நிற்கும் மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும் அபாயமும் உள்ளது. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அவசரநிலை நடவடிக்கை

2 ஆண்டுகளில் தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது, இதற்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் மட்டுமே.

முந்தைய காலத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்த பகுதிகளில் தற்போது 800 அடிக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் நிலத்தடி நீர் பற்றாக்குறை மற்றும் புவி வெப்பமும் தான். காலம் தாழ்த்தாமல் உடனடியாக காலநிலை அவசரநிலையை அமல்படுத்த வேண்டும்.

ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வாழ்க்கை முறையை முற்றிலுமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நிலக்கரி, பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவேண்டும்.

அதற்கு பதிலாக சோலார் போன்ற மாற்று வழியை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். அண்டை நாடுகளில் பொது போக்குவரத்தை மட்டுமே மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே நிலையை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதினால் காற்று மாசு குறைந்து புவி வெப்பமும் குறைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. காலநிலை மாற்றம் மட்டுமல்லாமல் மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தீய வழிகளை தகர்த்து, போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அனைவரும் நல்வழியில் வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story