நீலகிரி போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது
கேரள வனப்பகுதியில் வேட்டைக்கு சென்ற நீலகிரி போலீஸ்காரர் உள்பட 8 பேரை முத்தங்கா வனத்துறையினர் கைது செய்தனர்.
கூடலூர்
கேரள வனப்பகுதியில் வேட்டைக்கு சென்ற நீலகிரி போலீஸ்காரர் உள்பட 8 பேரை முத்தங்கா வனத்துறையினர் கைது செய்தனர்.
வனவிலங்கு வேட்டை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி சிலர் வனவிலங்கு வேட்டைக்கு செல்வது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி கேமராவில் பதிவானது.
இதுதொடர்பாக கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர்கள், நீலகிரி மாவட்டம் எருமாடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிஜூ(வயது 43) உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது.
கோர்ட்டில் முன்ஜாமீன்
இதையடுத்து அவர்கள் மீது முத்தங்கா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் எருமாடு போலீஸ்காரர் சிஜூ, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
இதனால் மற்ற 6 பேரை வனத்துறையினர் தேடி வந்தனர். தொடர் விசாரணையில், பந்தலூர் தாலுகா சப்பந்தோடு பகுதியை சேர்ந்த சோமன்(58) என்பவர் நாட்டுத்துப்பாக்கியை வனவிலங்கு வேட்டைக்காக அவர்களுக்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
8 பேர் கைது
இந்த நிலையில் துப்பாக்கி வழங்கிய சோமன், எருமாடு போலீஸ்காரர் சிஜூ (43), அவரது கூட்டாளிகள் சிபி(49), சிஜோ(48), மேபில் ஆபிரகாம்(34), சுரேஷ்(43), சுரேந்திரன்(40) கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜூ(51) ஆகிய 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஏற்கனவே கள்ளத்துப்பாக்கி தயாரித்த வழக்கில் சோமன், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது மீண்டும் வனவிலங்கு வேட்டைக்கு கள்ளத்துப்பாக்கியை தயாரித்து வழங்கி உள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story