தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவர் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, சீரான மின்வினியோகம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 5-ந் தேதி செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது சீராக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
ஒளிராத ஒளிரும் ஸ்டிக்கர்
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம், பழையபேட்டை, டக்கரம்மாள்புரம் ஆகிய சாலைகளில் போலீசார் சார்பில் சாலையில் இரும்பு தடுப்பான பேரிகாடு வைக்கப்பட்டு உள்ளது. இதில் இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண மஞ்சள், சிவப்பு ஸ்டிக்கர்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் இரும்பு தடுப்பு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி அவதிப்படுகிறார்கள். ஆகவே, இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் சரியாக ஒளிருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சரவணன், கே.டி.சி.நகர்.
ஆபத்தான மின்கம்பம்
சுத்தமல்லி அருகே கொண்டாநகரம் பஞ்சாயத்து பாரதியார் நகர் மேற்கு 8-வது தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே முறிந்தும், விரிசல் விழுந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே ஆபத்தான அந்த மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜசேகர், சுத்தமல்லி.
மின்விளக்கு அமைக்க வேண்டும்
நாங்குநேரி தாலுகா உன்னங்குளம் பஞ்சாயத்து குசவன்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்கு செல்லும் சாலையில் சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு இல்லை. இதனால் மாலை, இரவு நேரங்களில் வெளியூர் சென்று திரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் அந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே, அந்த பகுதியில் மின்விளக்கு அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேரிராஜா, குசவன்குளம்.
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வீராசமுத்திரம் பஞ்சாயத்து நாணல்குளம் தெற்கு தெருவில் பல ஆண்டுகளாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் தண்ணீர் வரவில்லை என்று நாணல்குளத்தை சேர்ந்த முருகன் என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அந்த குடிநீர் தொட்டியை சரிசெய்து, தற்போது தண்ணீா் வருவதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளனர். எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
வாறுகால் தூர்வாரப்படுமா?
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டம் கிராமத்தில் வாறுகால் தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுதன், அச்சங்குட்டம்.
வேகத்தடை தேவை
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் இருந்து இலஞ்சி செல்லும் வழியில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அய்யாபுரம் விலக்கு உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், அய்யாபுரம் விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் அவலம் உள்ளது. எனவே, விபத்துக்களை தடுக்க இந்த பகுதியில் வேகத்தடை அல்லது இரும்பு தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
சாலையோரம் கிடக்கும் குப்பைகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியில் சேகரிப்படும் குப்பையானது அங்குள்ள கருப்பசாமி கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் குப்பை தொட்டியில் வைக்கப்படுகிறது. இந்த குப்பை தொட்டியை பன்றிகள் தள்ளிவிட்டு, அதை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும், குப்பைகள் தினமும் அள்ளப்படாமல் இருப்பதால் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் வைக்கப்படும் குப்பைகளை தினமும் அள்ளுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாரியப்பன், சிந்தாமணிநகர்.
-
Related Tags :
Next Story