பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்- துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேட்டி
மக்களுக்கு நிவாரணம் வழங்க பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியுள்ளார்.
மும்பை,
மக்களுக்கு நிவாரணம் வழங்க பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல்
நாடு முழுவதும் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து மாநில அரசு இந்த வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
மத்திய அரசு வரி அதிகம்
நாங்கள் மாநில அரசை நடத்த வேண்டும். இருப்பினும் மக்கள் மீதான சுமையை குறைக்க புதிய வரிகளை விதிக்க விரும்பவில்லை. மாறாக சி.என்.ஜி. மற்றும் பி.என்.ஜி. எரிவாயு மீதான ரூ.1,000 கோடி வரியை குறைத்துள்ளோம். இந்த வகையில் பெண்கள், இலகுரக வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு உதவி புரிந்துள்ளோம்.
தற்போது பெட்ரோல், டீசல் மீதான வரியையும் மாநில அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அப்படியானால் மத்திய அரசும் தங்கள் வரியை குறைக்க வேண்டும். அதன் வரியானது நாம் விதிக்கும் வரியை விட அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக பிரதமரை அணுகி முறையிட்ட சரத்பவார், நாவப் மாலிக் கைது செய்யப்பட்டபோது ஏன் இத்தகைய அவசரத்தை காட்டவில்லை என எம்.ஐ.எம். கட்சி தலைவர் இம்தியாஸ் ஜலீல் கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அஜித்பவார், “இந்த குற்றச்சாட்டு தவறானது. இந்த சந்திப்பு குறித்த செய்திகளை திரித்து சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
சந்திப்பின் போது தற்போது நிலவும் அனைத்து முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் மோடியிடம் பேசியதாக சரத்பவார் என்னிடமும், மாநில உள்துறை மந்திரி திலிப் வால்சே பாட்டீலிடமும் தெரிவித்தார்” என்றார்.
மெட்ரோ ரெயில் பணிமனை
மேலும் மும்பை மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பது குறித்த பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் பேசி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியது குறித்து தெரிவித்த அவர், “ மகா விகாஸ் அகாடி அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. நாங்கள் எந்த பிரச்சினைக்கும் செல்ல விரும்பவில்லை” என்றார்.
Related Tags :
Next Story