அல்கொய்தா அமைப்பின் தலைவர் பேச்சு கண்டிக்கத்தக்கது; காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அஜய் மக்கான் பேட்டி


அல்கொய்தா அமைப்பின் தலைவர் பேச்சு கண்டிக்கத்தக்கது; காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அஜய் மக்கான் பேட்டி
x
தினத்தந்தி 7 April 2022 9:11 PM IST (Updated: 7 April 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரத்தில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

 பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில்  காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அஜய் மக்கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விலைவாசி உயர்வு

  நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதியில் இருந்து அனைத்து விதமான பொருட்களின் விலையையும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு உயர்த்தி விட்டது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் தினம், தினம் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். சாதாரண ஏழை மக்கள் இந்த நாட்டில் வாழ்வதே பெரிய சவாலாக உள்ளது.

  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விலைவாசி உயர்வை பா.ஜனதாவினர் கொண்டாடி வருகிறார்கள்.

விவசாயிகளை பழிவாங்கும்...

  பா.ஜனதா அரசு அமைந்த பின்பு பெட்ரோல் மீதான வரி 203 சதவீதமும், டீசல் மீதான வரி 531 சதவீதமும் அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.26 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கிறது. கியாஸ் சிலிண்டர், வணிக சிலிண்டர்களின் விலை உயர்வு காரணமாக மக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ந் தேதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.

  நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மத்திய பா.ஜனதா அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயிகளுக்கான உரங்கள், பிற பொருட்களின் விலையை பா.ஜனதா அரசு உயர்த்தி, விவசாயிகளை பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது.
  இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது

  பின்னர் அல்கொய்தா மற்றும் ஹிஜாப்புக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு கூறுவது குறித்து அஜய் மக்கானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், ‘ஹிஜாப் விவகாரத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பேச்சை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அல்கொய்தா தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பு, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட எந்த தகுதியும் கிடையாது.

  அதற்கான உரிமையும் கிடையாது. நமது நாட்டின் பிரச்சினையை, நாமே பேசி தீர்த்து கொள்வோம். இந்த விவகாரத்தில் அல்கொய்தா அமைப்பின் தலையீடு தேவையற்றது. அல்கொய்தா அமைப்பினர் பயங்கரவாதத்தின் மூலம் எப்படி நாட்டை நாசப்படுத்த நினைக்கிறார்களோ, அதுபோல் தான் பா.ஜனதாவினர் தங்களது பேச்சால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள். மக்கள் பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது’ என்றார்.

Next Story