கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தந்தை கொலை


கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தந்தை கொலை
x
தினத்தந்தி 7 April 2022 10:00 PM IST (Updated: 7 April 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தந்தை கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அய்யம்பேட்டை:
கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தந்தை கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அய்யம்பேட்டை அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தி.மு.க. பெண் கவுன்சிலரின் தந்தை
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போலீஸ் சரகம் ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ரஜாக்(வயது 63). இவரது மனைவி நூர்ஜகான். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். அப்துல் ரஜாக் வெளிநாட்டில் இருந்து விட்டு ஊருக்கு வந்து ராஜகிரியில் சொந்தமாக துணிக்கடை(கைலி வியாபாரம்) நடத்தி வந்தார். 
இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகனைத் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது. அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மகள் ஹதிஜா பீவி கும்பகோணம் மாநகராட்சி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார்.
மகனுக்கு தகவல் 
நேற்று முன்தினம் இரவு அப்துல் ரஜாக் வழக்கம்போல் தனது கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். நேற்று காலையில் வெகு நேரம் ஆகியும் ராஜகிரியில் கடை திறக்காததால் அங்குள்ளவர்கள் அப்துல் ரஜாக்கின் மூத்த மகனுக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவல் அறிந்து உடனடியாக அவரது மூத்த மகன் முகமது ஆரிப், தந்தை வசித்து வந்த வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்ேக கண்ட காட்சியை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்
வீட்டின் உள்ளே அவரது தந்தை அப்துல் ரஜாக், ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகளும், பொருட்களும் சிதறி கிடந்தன. 
இது குறித்து முகமது ஆரிப் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை
பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்துல் ரஜாக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் ஹேமா, தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மோப்ப நாய் ‘டபி’ அங்கு வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து ரெகுநாதபுரம் பஸ் நிறுத்தம் வரை ஒடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
நகை-பணத்துக்காக நடந்த கொலையா?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை குறித்து துப்பு துலக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த கொலை சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story