புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது
சத்துவாச்சாரியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலக சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்த பகுதிகளில் தார்சாலை போடப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்துவாச்சாரி பஸ்நிறுத்தத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள 4 முனை சந்திப்பு வரை சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த சாலை வழியாக கட்டுமான பணிக்காக செங்கற்கள் ஏற்றியபடி லாரி ஒன்று சென்றது. 4 முனை சந்திப்பில் லாரி வந்தபோது புதிதாக போடப்பட்ட சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பின்சக்கரங்கள் அவற்றில் இறங்கி சிக்கியது. டிரைவர் அதில் இருந்து லாரியை நகர்த்த முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பள்ளத்தில் சிக்கிய லாரியில் இருந்த செங்கற்கள் மற்றொரு லாரிக்கு மாற்றப்பட்டன. பின்னர் அந்த லாரி பள்ளத்தில் இருந்து கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. புதிதாக போடப்பட்ட தார்சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது. அதனால்தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டு லாரி சிக்கியது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க தரமான சாலைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story