அனைத்து பள்ளிகளிலும் சாரணர் இயக்கம் ஏற்படுத்தப்படும்
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சாரணர் இயக்கம் ஏற்படுத்தப்படும் என்று முதன்மைக்கல்வி அதிகாரி கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சாரணர் இயக்கம் ஏற்படுத்தப்படும் என்று முதன்மைக்கல்வி அதிகாரி கூறினார்.
புத்தாக்க பயிற்சி
தஞ்சை கல்வி மாவட்ட அளவில் சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாரணர் இயக்க மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ராதிகாமைக்கேல் தலைமை தாங்கினார். தஞ்சை கல்வி மாவட்ட அலுவலர் குழந்தை ராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தும், ஆளுனர் விருது பெற்ற சிறந்த சாரணர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பள்ளிகளில் உள்ள சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் என ஒவ்வொரு அமைப்பிலும் மாணவர்கள் பங்கு பெற வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் சாரணர் இயக்க செயல்பாடு சற்று தொய்வாக இருந்தது. தற்போது அது முடுக்கி விடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் சாரணர் இயக்கம்
அனைத்து பள்ளிகளிலும் சாரணர் இயக்கம் ஏற்படுத்தப்படும். மேலும் சாரணர் இயக்கம் தஞ்சை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது என்ற நிலையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் சாமிநாதன், சாரணர் இயக்கத்தை சேர்ந்த அறிவானந்தம், சுவாமிநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிஅல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சாரணர் இயக்க மாவட்ட செயலாளர் சந்திரமவுலி வரவேற்றார். முடிவில் மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் குழந்தைசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story