லாரியில் இருந்து கொட்டப்பட்ட குப்பைக்குள் சிக்கி பெண் பலி


லாரியில் இருந்து கொட்டப்பட்ட குப்பைக்குள் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 7 April 2022 10:58 PM IST (Updated: 7 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளலூர் குப்பை கிடங்கில் லாரியில் இருந்து கொட்டப்பட்ட குப்பைக்குள் சிக்கி பெண் பலியானார்.

போத்தனூர்

வெள்ளலூர் குப்பை கிடங்கில் லாரியில் இருந்து கொட்டப்பட்ட குப்பைக்குள் சிக்கி பெண் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் பணி

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சிவகாமி (வயது 52). இவர்களுக்கு 3 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். சிவகாமி வெள்ளலூர் குப்பை கிடங்கில்  பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சிவகாமி மற்றும் அவரது மகள் பொன்னி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சிவகாமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னி சக ஊழியர்களுடன் அவரை தேடினார்.

குப்பைக்குள் சிக்கி பெண் பலி

அப்போது லாரிகளில் இருந்து கொட்டப்பட்டிருந்த குப்பைக்குள் சிவகாமியின் கால் தெரிந்தது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவகாமி அமர்ந்து குப்பைகளை பிரித்துக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த 2 டிப்பர் லாரிகள், தவறுதலாக சிவகாமியின் மீது குப்பைகளை கொட்டியதாக தெரிகிறது. இதனால் அவர் குப்பைக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. 

சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்தெடுக்க ஒப்பந்ததாரருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் சிலர் அனுமதி இல்லாமல் குப்பை கிடங்கிற்குள் வந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து செல்கின்றனர். தற்போது உயிரிழந்த சிவகாமியும், அனுமதியில்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க வந்தவர்தான்.
அப்போது அங்கு வந்த லாரிகளில் இருந்து குப்பைகளை கொட்டும்போது, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க முயன்றுள்ளார். 

இந்த நிலையில் அவர் மீது குப்பைகள் விழுந்து, அதில் புதைத்து உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் சிவகாமி உயிரிழந்ததற்கான முழு காரணமும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும். 

மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்குள் வெளி நபர்கள் வராமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி குப்பை கிடங்கை சுற்றிலும் சுவர் கட்டப்பட உள்ளது. 

மேலும் கண்காணிப்பு கேமராவும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. யாரேனும் அனுமதியின்றி குப்பை கிடங்கிற்குள் புகுந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story