பெற்றோரை குற்றவாளிகளாக்க முயற்சியா


பெற்றோரை குற்றவாளிகளாக்க முயற்சியா
x
தினத்தந்தி 7 April 2022 11:06 PM IST (Updated: 7 April 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சி நடப்பதாக மாணவியின் பெற்றோர் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

போடிப்பட்டி
உடுமலை மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சி நடப்பதாக மாணவியின் பெற்றோர் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மாணவி கழுத்து அறுத்து கொலை
திருப்பூர் மாவட்டம், உடுமலை காந்திசவுக் பத்திரகாளியம்மன் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ். தனியார் கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக உள்ளார். இவருடைய மனைவி கற்பகவள்ளி. டெய்லராக பணி புரிந்து வருகிறார். இவர்களுடைய மகள் ஹர்த்திகா ராஜ் (வயது 17). இவர் உடுமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மாதம் 28-ந்தேதி பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி, வீட்டில் தனியாக இருந்த மாணவி ஹர்த்திகா ராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
பரபரப்பு வீடியோ
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சித்து ஒரு சிலர் துன்புறுத்துவதாக கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அந்த வீடியோவில் மாணவியின் தாய் சண்முகவள்ளி கூறியுள்ளதாவது:-
‘எங்கள் மகள் ஹர்த்திகா ராஜ் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 28 -ந் தேதி நானும் என் கணவரும் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது எங்கள் மகள் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் கிடந்தாள். அவளை உடனே உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றோம். அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை செய்து கோவைக்கு கொண்டு சென்றோம். வழியிலேயே அவள் உயிரிழந்ததால் மீண்டும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தோம். சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் எங்கள் மகளின் மரணத்துக்குத் தீர்வு கிடைக்கவில்லை. 
சித்ரவதை
போலீஸ் நிலையத்தில் எங்களை அடித்து உதைத்து விசாரிக்கப் பார்க்கிறார்கள். நீங்களே தான் கொலை செய்தீர்கள் என்று சொல்லி எங்களை சித்ரவதை செய்கிறார்கள். சாமி வருது, பூதம் வருது என்று சொல்லி பொதுமக்களை வைத்து அடித்து சித்ரவதை செய்கிறார்கள். சேலையை உருவி கீழே இழுத்துப்போட்டு நடக்க முடியாத அளவுக்கு சித்ரவதை செய்கிறார்கள். போலீஸ் முன்னாலேயே இவ்வளவு செய்தும் போலீசார் ஏன் என்று தட்டிக்கேட்கவில்லை. என்னையும் என் கணவரையும் சித்ரவதை செய்கிறார்கள்.
என் பிள்ளையின் இழப்புக்கு தீர்வு காண எல்லோரும் உதவி செய்யுங்கள். என் பிள்ளைக்கு நடந்த கொடுமை இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது'.
இவ்வாறு சண்முகவள்ளி கூறியுள்ளார்.
மேலும் மாணவியின் தந்தை, என் குழந்தையைக் கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாணவியின் பெற்றோரை துன்புறுத்துவது யார், சாமி, பூதம் என பயமுறுத்துவது யார், உண்மையான குற்றவாளி யார் என்று பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை இது எழுப்பியுள்ளது.

Next Story