சான்றிதழ்களை பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் திவ்யதர்சினி, பொதுமக்களுக்கு வேண்டுகோள்
தர்மபுரி மாவட்டத்தில் சான்றிதழ்களை பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் சான்றிதழ்களை பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
சான்றிதழ்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் சேர்த்தல், நகல் அட்டை கோருதல் உள்ளிட்ட பணிகளுக்கு இணையத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய பொதுமக்கள் நலன் கருதி பப்ளிக் போர்டல் www.tnpds.gov.in இலவசமாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாருடைய உதவியும் இன்றி தங்களுடைய செல்போன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இது தொடர்பாக ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் தங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மாறாக இடைத்தரகர்கள் மற்றும் மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்பு கொள்ள தேவை இல்லை.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்களில் பொதுமக்கள் சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களை பெற அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புகார் தெரிவிக்கலாம்
இந்த பணிகளை செய்து தருவதாக இடைத்தரகர்கள், மூன்றாம் நபர்கள் கூறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077, 04342-233299, 9445045610, 9445000216 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இத்தகைய புகார்களுக்கு உள்ளானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு 15 நாட்களில் மின்னணு ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) அச்சிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனியார் இணையதள சேவை மையங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் அவற்றிற்கு வழங்கப்பட்ட ஐ.டி. நிறுத்தம் செய்யப்படும். சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அரசின் அனுமதியை பெறாமல் இணையதள சேவை மையங்கள் செயல்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story