அரூரில் அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகள் தேர்வு சிறப்பு முகாம்-11-ந்தேதி நடக்கிறது


அரூரில் அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகள் தேர்வு சிறப்பு முகாம்-11-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 7 April 2022 11:20 PM IST (Updated: 7 April 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் அரூரில் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

தர்மபுரி:
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு முகாம் அரூரில் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
அனைவருக்கும் வீடு திட்டம்
இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி பீச்சான் கொட்டாய் திட்டப்பகுதியில் 504 குடியிருப்புகள், நம்பிபட்டி திட்டப்பகுதியில் 420 குடியிருப்புகள், அம்பேத்கர் நகர் திட்டப்பகுதியில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 
இந்த வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் அரூர் பேரூராட்சி பகுதி அருகில் வசித்து வரும் சொந்த வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தினரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்
அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை பயனாளி பங்கீட்டு வாரியத்திற்கு முன்பணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் குடும்பத்தினருக்கு சொந்த வீடும், நிலமும் இல்லை என்றும், அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கோ விட மாட்டேன் என்றும் உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின்படி வீடுகளை பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் அரூர் பேரூராட்சி அம்பேத்கர் நகர் சமூக கூடத்தில் வருகிற 11- ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் பயன்பெற தகுதியுடைய ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பயனாளி பங்கீட்டு தொகையாக ரூ.1.30 லட்சம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story