கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு
கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.
காரைக்குடி,
கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.
வடமாடு மஞ்சுவிரட்டு
கல்லல் அருகே உள்ளது பனங்குடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பால்குட விழாவையொட்டி ஆண்டுதோறும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த மஞ்சுவிரட்டு நடத்தப்படவில்லை. இதையொட்டி இந்தாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு சென்னை நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அங்குள்ள மைதானத்தில் தகுந்த தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 15 காளைகள் கலந்துகொண்டது. ஒரு காளையை அடக்க 9 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு மொத்தம் 135 மாடுபிடிவீரர்கள் களத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு காளையை அடக்க முயன்றனர்.
பரிசுகள்
இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டது. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் அவர்களை தூக்கி வீசியது. முன்னதாக காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், சங்க மாநில செய்திதொடர்பாளர் அருள்ராஜ் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் போட்டி தொடங்கி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், குத்துவிளக்கு, சைக்கிள், அண்டா, குடம் உள்ளிட்ட பரிசு பொருட்களும், சிறப்பு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனங்குடி கிராம மக்கள் செய்திருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story