மானாமதுரை ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


மானாமதுரை ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 8 April 2022 12:05 AM IST (Updated: 8 April 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 15-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

மானாமதுரை, 
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 15-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
சித்திரை திருவிழா
மானாமதுரை வைகையாற்று கரையில் அமைந்துள்ளது ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2020-21ஆகிய ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த விழா நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு கொரோனா தொற்று முற்றிலும் குறைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஷ்வர வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் நேற்று காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. 
முன்னதாக ஆனந்தவல்லியம்மன், சோமநாதர், பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். விழாவையொட்டி தினமும் இரவு பூதவாகனம், அன்ன பறவை வாகனம், கமலம், கைலாசம், யானை, கிளி, 2 குதிரை வாகனம், 2 சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 14-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. 15-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது.
ஆற்றில் அழகர் இறங்குதல்
 கொடியேற்ற விழாவில் மானாமதுரை நகராட்சி ஆணையாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் மானாமதுரை வைகையாற்று கரையில் உள்ள வீரஅழகர் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. 15-ந்தேதி இரவு எதிர் சேவை நிகழ்ச்சியும், 16-ந்தேதி காலை வீரஅழகர் மானாமதுரை வைகையாற்றில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மானாமதுரை சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகையாறு முழுவதும் நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் சுத்தம் செய்து சீரமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கியதால் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Next Story