பேராவூரணி வாலிபரிடம் ரூ. 2.17 லட்சம் மோசடி


பேராவூரணி வாலிபரிடம் ரூ. 2.17 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 8 April 2022 1:06 AM IST (Updated: 8 April 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை என்று கூறி பேராவூரணியை சேர்ந்த வாலிபரிடம் ரூ.2.17 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:
வெளிநாட்டில் வேலை என்று கூறி பேராவூரணியை சேர்ந்த வாலிபரிடம் ரூ.2.17 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தனியார் நிறுவன ஊழியர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்த வெளிநாட்டு வேலைக்கான பதிவு கட்டணம், நேர்முக தேர்வு மற்றும் விசாஆகியவற்றிற்கான கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
 இதனை உண்மை என நம்பிய அந்த வாலிபர் தனது வங்கிகணக்கில் இருந்து, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து200-ஐ அனுப்பி உள்ளார். ஆனால் பணம் அனுப்பி நீண்டநாட்கள் ஆகியும் நேர்முக தேர்வுக்கு அழைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர், மர்ம நபர் தொடர்பு கொண்ட எண்ணிற்கு அழைத்தார். அப்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அந்த வாலிபர் உணர்ந்தார். இதுகுறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், தஞ்சையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவருடைய  செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் வங்கி கணக்கில் கே.ஓய்.சி விவரங்களை அப்டேட் செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.  இதனை உண்மை என்று நம்பிய அவர் அந்த லிங்கின் உள்ளே சென்று தன்னுடைய வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார்.  மேலும் தன்னுடைய இணைய வங்கியின் பெயர் மற்றும் கடவுசொல் (பாஸ்வேர்டை) பதிவு செய்துள்ளார்.  மேலும் பிறந்த தேதி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். 
 அப்போது அவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி.யை  பதிவு செய்துள்ளார்.  அவர் ஓ.டி.பி.யை பதிவு செய்த உடனே அவருடைய வங்கிகணக்கில் இருந்து  ரூ. 1.34 லட்சம் எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடைய வங்கியை தொடர்பு கொண்டார். 
அப்போது தான் தனக்கு வந்த குறுந்தகவல் போலியானது என்றும், அந்த குறுந்தகவலால் தன்னிடம் ரூ.1.34லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story