கொடைக்கானல் வனப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் திட்டம் இல்லை-மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்


கொடைக்கானல் வனப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் திட்டம் இல்லை-மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்
x
தினத்தந்தி 8 April 2022 1:32 AM IST (Updated: 8 April 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் வனப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் திட்டம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல் தெரிவித்து உள்ளது.

மதுரை,

கொடைக்கானல் வனப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் திட்டம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல் தெரிவித்து உள்ளது.

வனவிலங்கு சரணாலயம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் பழனி, தேனி மாவட்டம் பெரியகுளத்தின் சில பகுதிகள் மற்றும் கொடைக்கானல் வனப்பகுதி ஆகியவற்றை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்து, அரசு அரசாணையை வெளியிட்டு உள்ளது. கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் 608 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு பல வகையான புல் வகைகள், தூய்மையான நீர்நிலைகள் என சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சூழல் உள்ளது. இந்தநிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த மாதம் ஆய்வு செய்து வட்டக்கானல் வழியாக டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு வனப்பகுதிக்குள் சாலை அமைக்க முடிவு செய்து உள்ளனர். அவர்கள் திட்டமிட்டபடி சாலை அமைத்தால், வன உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் சாலை அமைக்க முறையான அனுமதி பெறவில்லை. எனவே கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு வட்டக்கானல் வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

புதிய சாலை அமைக்க திட்டமில்லை

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, வனப்பகுதி வழியாக புதிய சாலை அமைக்கும் திட்டமில்லை. பல ஆண்டுகளாக தார்ச்சாலை வசதி இல்லாததால், வெள்ளகவி கிராமத்தில் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றும் பணிதான் நடக்கிறது என தெரிவித்தார்.
இந்த தகவலை பதில் மனுவாக தாக்கல் செய்வதற்கு அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story