நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல் டாக்டர் அதிரடி கைது


நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல் டாக்டர் அதிரடி கைது
x
தினத்தந்தி 8 April 2022 1:52 AM IST (Updated: 8 April 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பல் டாக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நெல்லை:
நெல்லை டவுன் பெரிய தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 48). இவர் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்த ஆஸ்பத்திரிக்கு நெல்லையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயிற்சிக்கு சென்றனர்.

இதில் ஒரு மாணவியிடம் கடந்த 1 மாதமாக டாக்டர் சுகுமார் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. 

இதில் மனமுடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதவி போலீஸ் கமிஷனர் பாலசந்திரன் விசாரணை நடத்தி, டாக்டர் சுகுமாரை நேற்று அதிரடியாக கைது செய்தார். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பல் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Next Story