ஆசிரியையிடம் 15 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
ராஜாக்கமங்கலம் அருகே ஆசிரியையிடம் 15 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே ஆசிரியையிடம் 15 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பள்ளி ஆசிரியை
தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவருடைய மனைவி ஷெர்லிதல் ஜோஸ்பின்(வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஷெர்லிதல் ஜோஸ்பின் சாந்தபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சுனில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருவதால், ஷெர்லிதல் ஜோஸ்பின் ராஜாக்கமங்கலம் அருேக அனந்தநாடார்குடியில் உள்ள தனது தாயாரின் வீட்டில் இருந்து பணிக்கு சென்று வருகிறார்.
பின்தொடர்ந்த மர்ம நபர்
இந்தநிலையில் ஷெர்லிதல் ஜோஸ்பின் நேற்று முன்தினம் தனது தாயார் அற்புதபாயை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் நாகர்கோவிலுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்புவதற்காக ஆசாரிபள்ளம் வழியாக வந்து கொண்டிருந்தனர். வழியில் ஆசாரிபள்ளம் பகுதியில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் நிறுத்தி பணம் எடுத்து விட்டு மீண்டும் புறப்பட்டுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
15 பவுன் நகை பறிப்பு
அனந்தநாடார்குடி சந்திப்பு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென வேகமாக வந்து ஷெர்லிதல் ஜோஸ்பின் கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார்.
இதில் நிலைதடுமாறிய ஷெர்லிதல் ஜோஸ்பினும், அவரது தாயாரும் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தனர்.மேலும், திருடன்... திருடன் என்று சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் நகையுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதையடுத்து படுகாயமடைந்த ஷெர்லிதல் ஜோஸ்பினை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
செயல்படாத கேமராக்கள்
சம்பவம் நடந்த அனந்தநாடார்குடி சந்திப்பு பகுதியில் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம் சார்பில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், கேமராக்களை முறையாக பராமரிக்காததால் சமீபகாலமாக அவை செயல்படவில்லை. இதனால், போலீசாருக்கு நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், போலீசார் சார்பில் பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களும் இதேபோல் செயல்படாமல் உள்ளது. எனவே, பழுதான கேமராக்கை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story