கொரோனா இறப்பு நிவாரணம் பெற புதிய வழிகாட்டுதல்கள்-கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு


கொரோனா இறப்பு நிவாரணம் பெற புதிய வழிகாட்டுதல்கள்-கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2022 2:08 AM IST (Updated: 8 April 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா இறப்பு நிவாரணம் பெற புதிய வழிகாட்டுதல்களை கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்து உள்ளார்.

மதுரை,

கொரோனா இறப்பு நிவாரணம் பெற புதிய வழிகாட்டுதல்களை கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்து உள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையவழி விண்ணப்பம்

தமிழக அரசின் சார்பில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு உதவித்தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத்தளம் மூலம் மனுக்கள் பெறப்படுகிறது. அதில் இறப்பினை உறுதி செய்யும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு அரசின் இழப்பீடு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 470 பேர் இணையவழி விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 2 ஆயிரத்து 622 நபர்களின் விண்ணப்பங்கள் சிறப்பு குழுவின் பரிசீலினைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் என முடிவு செய்து தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 310 விண்ணப்பங்கள் இருமுறை பெறப்பட்ட மனு என நிராகரிக்கப்பட்டுள்ளன.

90 நாட்களுக்குள்...

அதில் எஞ்சிய விண்ணப்பங்கள் மருத்துவ ஆவணம் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. இவை குறித்து மருத்துவ ஆவண சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு முன்பு கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் அடுத்த மாதம் (மே) 18-ந் தேதிக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு பின்னர் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் காலத்தாமதத்திற்கான காரணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
எனவே கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் மேற்கண்ட சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி www.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் செய்து நிவாரணத்தொகையான ரூ.50 ஆயிரம் நிதி உதவியினை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story