வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்


வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 8 April 2022 2:36 AM IST (Updated: 8 April 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வடக்கன்குளம்:
வடக்கன்குளத்தில் அதிசய விநாயகர், அம்பாள் தேவி,  சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இந்த திருவிழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழா நாட்களில் மாலை 5.30 மணிக்கு மேல் அதிசய விநாயகர் ரதவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் தினமும் 3 வேளை தீபாராதனைகள் நடைபெறும். 

7-ம் திருவிழாவான வருகிற 13-ந் தேதி மாலையில் சண்முக பெருமான், நடராஜ பெருமான் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வருதல், 14-ந் தேதி காலை 7 மணிக்கு சண்முகபெருமான் வெள்ளை சாத்தி உட்பிரகாரத்தில் பவனி வருதல், மாலையில் சண்முகர்- தெய்வானை சமேதமாய் பச்சை சாத்தி ரதவீதிகளில் பவனி வருதல், 15-ந் தேதி மாலையில் சிவசுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நடக்கின்றது.

10-ம் திருவிழாவான 16-ந் தேதி மாலையில் சிவசுப்பிரமணி சுவாமி- வள்ளி, தெய்வானை சமேதமாய் மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தல், இரவு 9.50 மணிக்கு திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக அம்பாள் தேவியின் மின்னொளி அலங்கார தேரோட்டம் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கு கோவில் மண்டபத்தில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.  ஏற்பாடுகளை திருவிழா திருப்பணி குழு மற்றும் அதிசய விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story