துபாய் அழைத்து சென்று பார்களில் பெண்களை ஆபாச நடனமாட வைத்த கும்பல் கைது
துபாயில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அழைத்து ெசன்று பெண்களை பார்களில் ஆபாசமாக நடனமாட வைத்த கும்பலை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
பார்களில் நடனமாட வைப்பு
மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா, பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
சினிமா துறையில் பணியாற்றி வரும் பெண்களிடம் துபாயில் அதிக சம்பளத்திற்கு சினிமா துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது என்று கூறி ஒரு கும்பல் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வசூலித்து கொண்டு பெண்களை துபாய்க்கு அனுப்பி வைப்பதாகவும், அங்கு சென்றதும் சினிமா துறையில் வேலை வழங்காமல் பார்களில் வலுக்கட்டாயமாக நடனமாட வைப்பதாகவும் பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்து இருந்தார்.
அந்த புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசின் பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தது. அந்த புகாரின்பேரில் பெண்கள் பாதுகாப்பு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது சினிமா துறையில் வேலை வழங்குவதாக கூறி துபாய்க்கு பெண்களை அனுப்பி வைத்து அவர்களை பார்களில் வலுக்கட்டாயமாக நடனமாட வைத்து ஒரு கும்பல் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணையில் அவர்கள் கொப்பலை சேர்ந்த பசவராஜ் சங்கரப்பா (வயது 43), மைசூருவை சேர்ந்த ஆதர்ஷ் (28), தமிழ்நாடு சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராஜேந்திர நாட்டிமுத்து (32), சென்னையை சேர்ந்த மாரியப்பன் (44), பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வரும் சண்டூ (29), புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அசோக், தமிழ்நாடு திருவள்ளூரை சேர்ந்த ராஜீவ்காந்தி (35) என்பது தெரியவந்து உள்ளது. இவர்கள் 7 பேரும் சினிமா துறையில் வேலை செய்து வருகின்றனர்.
சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்கும் பெண்களை குறிவைத்து துபாயில் அதிக சம்பளத்திற்கு சினிமா துறையில் வேலை கிடைக்கும் என்று 7பேரும் ஆசை காட்டி உள்ளனர். பின்னர் அந்த பெண்களை துபாய்க்கு அனுப்பி வைக்க பணம் வசூலித்து வந்து உள்ளனர். அந்த பெண்களுக்கு விசா, பாஸ்போர்ட்டும் எடுத்து கொடுத்து அனுப்பி உள்ளனர். துபாய் சென்ற பெண்கள் முதலில் சினிமாவில் நடிக்க வைக்க தான் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். அதன்பின்னர் சரியாக நடிக்கவில்லை என்று கூறி அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி சிலர் பார்களில் ஆபாசமாக நடனம் ஆட வைத்து உள்ளனர்.
17 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்
இந்த கும்பல் இதுவரை 95 பெண்களை துபாய்க்கு அனுப்பி வைத்து உள்ளது. விசா, பாஸ்போர்ட்டில் இந்த கும்பல் முறைகேட்டில் எதுவும் ஈடுபடவில்லை. துபாயில் சிக்கி உள்ள 95 பெண்களையும் மீட்க நடவடிக்கை எடுப்போம். இந்த கும்பல் தற்போது 17 பெண்களை துபாய்க்கு அனுப்ப இருந்தது. அவர்களிடம் இருந்து 17 பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள், செல்போன்கள், மடிக்கணினி கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதை ராமன்குப்தா பார்வையிட்டார்.
Related Tags :
Next Story