தொழிலாளியை ெகான்று மலைப்பகுதியில் புதைத்த மைத்துனர்
அக்காளை அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த மைத்துனர் தொழிலாளியை ெகான்று மலைப்பகுதியில் புதைத்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணையில் இந்த கொலை அம்பலமானது.
ராஜபாளையம்,
அக்காளை அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த மைத்துனர் தொழிலாளியை ெகான்று மலைப்பகுதியில் புதைத்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணையில் இந்த கொலை அம்பலமானது.
தகராறு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாடசாமி(வயது 48). தொழிலாளியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு சுப்புலட்சுமி(38) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
மாடசாமி குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மைத்துனர் விஜயகுமார்(32) கண்டித்துள்ளார். இதற்கிடையே மாடசாமியை திடீரென காணவில்லை. அக்கம்பக்கத்தினர் சுப்புலட்சுமியிடம் கேட்ட போது அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.
வெளியூரில் உள்ளார்
சில நாட்களுக்கு முன்பு மாடசாமியின் சகோதரி ராஜேஸ்வரி, தான் மாடசாமியிடம் கொடுத்த பணம் மற்றும் பொருட்கள் குறித்து சுப்புலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ராஜேஸ்வரி சேத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது சகோதரரை பல ஆண்டுகளாக காணவில்லை.
அவரது மனைவியிடம் கேட்டபோது, வெளியூரில் இருப்பதாகவும், அவ்வப்போது போனில் தொடர்பு கொள்வதாகவும், கூறினார். ஆனால் சகோதரனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
கிடுக்கிப்பிடி விசாரணை
இதுகுறித்து போலீசார் சுப்புலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகவே கூறினார். பின்னர் மீண்டும் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் மாடசாமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதாவது அக்காளிடம் தகராறு செய்து துன்புறுத்திய மாடசாமியை, விஜயகுமார் கொலை செய்து இருப்பதும், இதற்கு சுப்புலட்சுமி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
வெட்டிக்கொலை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாடசாமிக்கும், சுப்புலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதேபோல 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் சுப்புலட்சுமியை, மாடசாமி அரிவாளால் தாக்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுப்புலட்சுமியின் சகோதரர் விஜயகுமார், மாடசாமியை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் மாடசாமிக்கும், விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த விஜயகுமார் அரிவாளால் வெட்டியதில் மாடசாமி இறந்தார். இதையடுத்து கொலையை மறைக்க மாடசாமியின் உடலை அருகே உள்ள புத்தூர் மலையடிவார பகுதியில் யாருக்கும் தெரியாமல் குழி தோண்டி புதைத்து விட்டார்.
இதற்கு சுப்புலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். கணவர் குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்ட போது, அவர் வெளியூரில் பணியாற்றி வருவதாக கூறி சுப்புலட்சுமி சமாளித்து வந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
2 பேர் கைது
இதையடுத்து விஜயகுமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சுப்புலட்சுமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் மாடசாமி உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று விஜயகுமார் அழைத்து வரப்பட்டார். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், அரசு மருத்துவர் அருண் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் தோண்டப்பட்டது. அப்போது மாடசாமியின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story