தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கான உரிய பாதுகாப்புக்குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும்; மாநில மகளிர் ஆணைய தலைவி பேச்சு


தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கான உரிய பாதுகாப்புக்குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும்; மாநில மகளிர் ஆணைய தலைவி பேச்சு
x
தினத்தந்தி 8 April 2022 3:03 AM IST (Updated: 8 April 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கான உரிய பாதுகாப்புக்குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி பேசினார்.

ஈரோடு
தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கான உரிய பாதுகாப்புக்குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி பேசினார்.
மகளிர் உரிமைகள் -பாதுகாப்பு
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்  நேற்று நடைபெற்றது. 
இந்த கூட்டத்துக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். 
மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி பேசியதாவது:-
தமிழக முதல் -அமைச்சர் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு இலவச பஸ் கட்டணம் என்பது, அவர்களுக்கு மறைமுகமான சேமிப்பாகும். மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி, அவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளையும் வழங்கியதன் மூலம் பெண்கள் பல்வேறு தொழில் செய்து குடும்பத்துக்கு வருமானத்தை ஈட்டி உள்ளனர். எங்களுக்கு வரும் பல்வேறு கோரிக்கை மனுக்களில் குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை பற்றி அதிகமாக வருகிறது. 
கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட குழுக்கள் மூலம் கண்காணித்து வந்தால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி கல்வித்துறை மூலம் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி, மாணவர்களின் மதிப்பெண்களை மட்டும் சாராமல், அவர்களின் நலன்களை பற்றி பேசுங்கள். போலீஸ் துறை சார்பில் மகளிருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகப்படுத்திட வேண்டும். புகார் பெட்டி இல்லாத பள்ளிக்கூடங்களில் புகார் பெட்டி வைத்து, வாரம் ஒரு முறை புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் போலீஸ் துறை சார்பில் பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வாரம் 2 மணி நேரமாவது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறும்படங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது மாணவ -மாணவிகளுக்கு அடிமனது வரை சென்றடையும். பஸ் நிறுத்தத்தில் மாணவிகள் பஸ்சில் ஏறும்வரை போலீசார் தொடர்ந்து கண்காணித்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்களுக்கான உதவி எண் 181 குறித்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 குறித்து அதிகப்படியான விளம்பரங்களை ஏற்படுத்திட வேண்டும். தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கான உரிய பாதுகாப்புக்குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும். பள்ளிக்கூடங்களில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மலைவாழ் பகுதியில் வசிக்கும் குழந்தைகளை கண்காணித்து, அவர்களுக்கு தொடர்ந்து கல்வி அளித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவான நடவடிக்கை
இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை, போலீஸ் துறை, உயர்கல்வி துறை, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பொது மருத்துவத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஆய்வு மேற்கொண்டு, துறைவாரியான மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி அந்த மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலலர் பூங்கோதை, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, பொது சுகாதாரத்துறை தாய்சேய் நல அலுவலர் கவுசல்யாதேவி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story