பசுந்தீவனம் தட்டுப்பாட்டால் கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகம்
பசுந்தீவனம் தட்டுப்பாட்டால் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு
பசுந்தீவனம் தட்டுப்பாட்டால் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
700 மாடுகள்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு விவசாயிகள் 50 கன்றுக்குட்டிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் விரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 450 பசு மாடுகளும், 250 எருமை மாடுகளும் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பசுந்தீவனம் தட்டுப்பாடு
தமிழக வியாபாரிகள் மற்றும் கேரளா, ஆந்திரா, மராட்டியம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறியதாவது:-
கோடை காலத்தில் அதிகமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பசுந்தீவனங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் உலர் தீவனங்கள் இருப்பு வைத்துள்ளதால் ஓரளவு சமாளித்து வருகின்றனர். ஆனால் கால்நடை வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வியாபாரிகள் குறைவு
தினமும் உலர் தீவனங்கள் வாங்க ரூ.150 வரை செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் வேறுவழியின்றி சந்தைக்கு விற்பதற்கு மாடுகளை அதிக அளவில் கொண்டு வருகின்றனர். ஆனால் சந்தையில் இருந்து வாங்கிச்செல்ல வியாபாரிகள் குறைவாகவே வருகின்றனர்.
குறிப்பாக கேரளா மாநில வியாபாரிகள் வருகை பாதியாக குறைந்துவிட்டதால் சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்துவிட்டது. ஆனாலும் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story