தொடர்மழையினால் மா விளைச்சல் பாதிப்பு


தொடர்மழையினால் மா விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 8 April 2022 3:39 AM IST (Updated: 8 April 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
மா விளைச்சல் 
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அதிக அளவில் மா மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இங்கு பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் அதிக அளவில் மாம்பழ விளைச்சல் இருக்கும். இந்தநிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் தற்போது மா விளைச்சல் அதிகமாக குறைந்துள்ளது. 
இதுகுறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:-
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாந்தோப்புகள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் மாங்காய் விளைச்சல் அதிகமாக இருக்கும். 
தொடர்மழை 
ஆனால் கடந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து செழிப்பு ஏற்பட்டதால் மா விளைச்சல் குறைந்துள்ளது. இதற்கு காரணம் பூமியின் மண் செழிப்பு அடைந்ததால் மாமரங்கள் சரியாக  பூ பூக்காமல் மாங்காய் விளைச்சல் குறைந்தது.
 மா இலையும் மஞ்சள் கலந்த நிறத்தில் தளுத்துவிட்டதால் காயின் பருமனும் குறைந்துள்ளது. எனவே இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகம் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இங்கு விளையும் மாங்காய் சென்னை, கோவை மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி  செய்யப்படுகிறது.
மாம்பழங்களில் பஞ்சவர்ணம், சப்பட்டை, கிளி மூக்கு, பாலாமணி, காலபாடி ஆகிய வகைகள் மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும். இதில் பஞ்சவர்ணம், சப்பட்டை ஆகியவை தான் மிகவும் சுவையாக இருக்கும். எனவே நிறைய பேர் இந்த வகை மாம்பழங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.  
தற்போது அதிக விளைச்சல் இல்லாததால் இந்த ஆண்டு மாங்காய் மிகவும் அதிக விலை போகும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்தும் கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சலும் இல்லை, விலையும் உயரும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story