இரும்பு கம்பியால் தாக்கி தந்தை கொலை; மகன் கைது


இரும்பு கம்பியால் தாக்கி தந்தை கொலை; மகன் கைது
x

இரும்பு கம்பியால் தாக்கி தந்தை கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டார்.

திருவெறும்பூர்:

தொழிலாளி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்தாளப்பேட்டை ஊராட்சியில் உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 55). கூலி தொழிலாளி. இவரது மனைவி மலர் என்ற மலர்கொடி(50). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் சரவணகுமாருக்கு(29) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், அவரை அவரது மனைவி விவாகரத்து செய்து பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மொபட் மற்றும் ஆட்டோ திருட்டு சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் சந்தேகத்தின்பேரில் சரவணகுமாரிடம் அடிக்கடி விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
காலால் எட்டி உதைத்தார்
இந்நிலையில் வாரத்திற்கு ஒருமுறை தனது ஊருக்கு வரும் சரவணகுமார் கடந்த 4-ந் தேதி இரவு குடிபோதையில் மந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது தந்தை சுப்பிரமணி குடிபோதையில் நடந்து வந்துள்ளார்.
அவரிடம் சரவணகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காலால் அவரது மார்பில் எட்டி உதைத்துள்ளார். மேலும் கீழே கிடந்த இரும்பு கம்பியால் சுப்பிரமணியை தாக்கியுள்ளார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சாவு
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சரவணகுமார் காலால் உதைத்தபோது, சுப்பிரமணிக்கு விலா எலும்பு உடைந்து நுரையீரலில் குத்தியிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சரவணகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story